market passion

Monday, April 14, 2008

கவிதை

இயற்கை அன்னை

வானிலே கண்சிமிட்டும் வண்ணமிகு விண்மீன்கள்
வயற்காட்டு வரப்பினிலே வணங்கி நிற்கும் நெற்கதிர்கள்
காற்றின் தழுவலாலே கரை கடக்கும் கடலலைகள்
காலை கதிரவன் தினம் கண்விழிக்கும் தியானங்கள்

அதிகாலை புலர்ந்திடும் அழகான சோலைப் பூக்கள்
பனித்துளி பளிங்குகள் படர்ந்திடும் புல்தரைகள்
பல நூறு வண்ணத்தில் படபடக்கும் பட்டாம்பூச்சி
சூழ்கொள்ளும் தேனீக்கள் ஸ்வரம் பாடும் ரீங்காரம்

அருவியின் சிதறல் சத்தம் அடிவாரத்தில் கேட்கும் தாலாட்டு
கரைபுரளும் ஆற்றினிலே நடைபயிலும் கொண்டை மீன்கள்
அந்தி வேளைக் களிப்பினிலே ஆடி அகவும் தோகை மயில்
குதூகலத்துடன் குருவிகள் கூட்டமாய் எழுப்பும் கூக்குரல்கள்

கோடைமழையின் குளிர்ச்சாரல் வட்டமிடும் வானவில்
தவிட்டுத் தூரல் தணிந்தபின் வீசும் மண்வாசம்
தாழப்பறக்கும் தட்டாம் பூச்சி - தாழம்பூ வாசம்
தண்ணீரில் தவளை சத்தம் - காட்டுக் குயிலின் சத்தம்

இயற்கையின் இயக்கத்தில் இயங்கிடும் இவுலகில்
இத்துனை கொடைகள் ஈடில்லா இன்பங்கள்

வளமனைத்தும் பெருகக் கொண்டு வடிவமைத்தான் வையகத்தை
இந் நிலமனத்தும் மானுடத்தை நிலைபெறச் செய்யும்முன்னே
இறைவனின் பரிசுகளில் இதை மிஞ்ஜி வேறும் உண்டோ
இனியதனை உணர்ந்திடுவோம் இன்புறவே வாழிந்திடுவோம்

Labels: , ,

Sunday, April 13, 2008

எழுத்தாளர் சுஜாதா(ரங்கராஜன்)

ஓர் எளிய மனிதரின் நினைவுகள்

சுஜாதா என்று எழுத்துலகில் அறியப்படும் ஓரு இனிய எழுத்தாளரை இழந்து நிற்கும் இவ்வேளையில் அவரைப் பற்றிய சில தகவல் துளிகள்:

காற்று புகாத இடங்கள் எப்படியில்லையோ, அதே போல இவர் எழுத்துலகில் சாதிக்காத/ தொடாத துறைகளே இல்லையென கூறலாம்.

அறிவியலை தனது எளிய முறையில் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் தமது படைப்புகளில் புகுத்தி தமிழ் எழுத்துலகிற்கே முன்னோடியாக திகழ்ந்தவர் இவரேயாவர்.

இவருடைய திறமை அறிவியல் சார்ந்து மட்டும் இல்லாமல் மற்ற துறைகளிலும் இருந்தது. இலக்கியத்தின் மீது தீராது மோகம் கொண்ட இவரது திறமை, சிறுகதைகள், தொடர்கள், அறிவியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள் என பரந்து விரிந்து நின்றது. இது மட்டுமா? சினிமாத் துறையிலும் தனது திறமையை நிரூபித்தவர்.

இவரது முதல் கதை 1953ஆம் ஆண்டு வெளி வந்தது.ஆனால் இவர் பிரபலமடைய தொடங்கியது 1962 ஆம் ஆண்டு முதல்தான்.இவரது படைப்புகள் தொடர்ந்து வெளியாகின,அவர் தனது இறுதி மூச்சு வரை எழுத்தையும் சேர்த்து சுவாசித்தவர்.இவரது படைப்பில் 100க்கும் மேற்ப்பட்ட நாவல்கள்,200க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள்,10 அறிவியல் நூல்கள், 10 நாடகங்கள் அடங்கும்.

அறிவியலை எப்படி தனது எழுத்துகளில் பதித்தாரோ அதேபோல், கை வலிக்க எழுதும் முறையை மாற்றி கணிணி மூலம் பதிப்புகளை எழுத வித்திட்டவரும் அதி வெற்றி கண்டவரும் இவரே.இன்று கணிணி இல்லாத படைப்பாளிகளே இல்லை எனலாம்.

இவருடைய எழுத்துகளில் காணும் நகைச்சுவை உணர்வு,சாதாரன வார்த்தைகள், நக்கல், எதார்த்தம் உள்ளிட்டவை இவருக்கு எண்ணற்ற ரசிகர்களை உலகம் பூராவும் பெற்றுத் தந்தது.

தமிழ் இலக்கிய உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர் சுஜாதா எனலாம். சுத்தத் தமிழில் எழுதினால்தான் இலக்கியம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அதை மாற்றி புதுமையைப் புகுத்தியவர் இவர்தான்.

ஒரு காலக் கட்டத்தில் இவர் எழுத்தைத் தாங்கி வெளிவராத இதழ்களே இல்லை எனலாம். இவரது எழுத்துக்கள் சாதாரண இதழ்கள் முதல் இலக்கியத் தரம் வாய்ந்த இதழ்கள் வரை எல்லாவற்றயும் அலங்கரித்தது.

கணிணிகள் குறித்தும், மனித மூளை குறித்தும் சுஜாதா பல நூல்கள் எழுதியுள்ளார்.தகவல், தொழில் நுட்பம், தமிழ் எழுத்துக்கள் குறித்தும் ஏராளமாக எழுதியுள்ளார்.இவரது ஆலோசனை கேட்டு பயன் அடைந்த தொழில் நுட்ப துறையினர் பலர்.இவரது ஆலோசனயின் பெயரில் உருவான தமிழ் எழுத்துக்களும் கணிசமானவை.
ஆங்கில கணிணி வார்த்தைகளுக்கு இணையாக தமிழ் வார்த்தைகள் ஏராளமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளார்.

நாம் இன்று பயன்படுத்தும் ஓட்டு போடும் இயந்திரத்தின் வடிவமைப்பாளரின் குழுவுக்கு தலைமை தாங்கி, வெற்றிகரமாக அதை முடித்து பாராட்டும் பெற்றவர்.இவரது எழுத்துப் பணியை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்து சிறப்பித்தது.ஆவரது கல்லூரி வகுப்பு தோழர் நமது முன்னாள் முதல்வர் அப்துல் கலாம் அவர்கள்.

எழுத்தாளர் ஒருவருக்கு முதன் முதலாக கட் அவுட் வைக்கப்பட்டது சுஜாதாவுக்குத்தான். ஆனந்த விகடனில் வெளியான அவரது நாவல்களான கனவுத் தொழிற்சாலை மற்றும் பிரிவோம் சந்திப்போம் ஆகியவற்றிக்காக விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் சுஜாதாவுக்கு சென்னை அண்ணா சாலையில் கட் அவுட் வைத்து பெருமைப்படுத்தினார்.

என்னை அவர்பால் ஈர்த்தது அவருடைய "கரையெல்லாம் செண்பகப்பூ" என்ற தொடர் கதைதான்.கிராமப்புர கவிதை வரிகளோடு கதையோட்டம் தெளிந்த நீரோடை போல் செல்லும்.இந்த கதை பின்னால் திரைப்படமாகவும் வெளி வந்தது.

அவரின் சொந்த வாழ்க்கையிலும் எளிமையாக வாழ்ந்தவர்.பணத்திற்கும் புகழுக்கும் என்றுமே பேராசை கொள்ளாதவர்.அவருக்கு நடந்த அறுவை சிகிச்சையைக்கூட நகைச் சுவையோடு ஏடுகளில் குறிப்பிட்டுள்ளார்.இயற்கைக்கு இசைந்து கொடுப்பவர்.

இன்று நம்மிடையே அவர் வாழவில்லையென்றாலும், அவருடைய எழுத்துக்கள் என்றும் நம்முடன் வசிக்கும் என்பதில் எவ்வித ஐய்யமும் இல்லை.அவர் ஆத்மா சாந்தியடைய நாம் பிரார்திப்போம்.

Labels:

Saturday, April 12, 2008

கவிதைகள்

ஆடிபெருக்கு

1.நிலாச்சோறு சாப்பிட்ட மொட்டை மொடியில்
இன்று தண்ணீர் தொட்டிகளும் கேபிள் டிவி வயர்களும்
அதலால், வா அன்பே, நாம்
நிலாவுக்கே போய் சோறு உண்ணுவோம்.



2.அன்று ஆற்றங்கரையில் அமர்ந்து
ஆடிப்பெருக்கை ஆனந்தமாய் கொண்டாடினோம்
ஆனால் இன்று ஆறுகள் திசை தெரியாமல் தவிக்கின்றன
ஏனென்றால் கரையின் மணல்கள்தான் திருடப்பட்டனவே!

Labels:

கவிதைகள்

முதல் முதலாய் உன்னைப் பார்க்கும் போது
உன் மௌனத்தை பார்த்து நான் நினைத்தேன்
நீ அதிகம் பேச மாட்டாய் என்று!

பின்புதான் புரிந்தது அதன் ரகசியம்
உன் இதழ்கள் ஒன்றையொன்று
முத்தமிட்டுக் கொண்டிருக்கின்றன என்று!




என்னை மயக்கியதோடல்லாமல்
என் தோட்டத்து மலர்களையும் அல்லவா
மயக்கினாய் நீ!

அவற்றை நான் கடக்கும் போதெல்லாம்
என்னைப் பார்த்து ஏக்கமாய்
கேட்கின்றன

எப்போது எங்களைப் பறித்து
உன் காதலியின் கூந்தலில்
சூடப் போகின்றாய் என்று


காதலியின் புகைப்படம்

உன் நிழலுடன் இருந்தாலே
இத்தனை சுகமென்றால்
உன்னுடன்( நிஜத்துடன்)இருந்தால்
சொல்லவும் வேண்டுமோ?


ஊடல்

அன்பே,உன் மௌனத்தால்
ஏன் என்னை தினமும் கொல்கிறாய்
இன்று உன் மௌனத்தைக் கொன்று விடு
என்னுடன் பேசிவிடு


முரண்பாடு

ஏன் என் மனதில் இந்த முரண்பாடு
உன் முகத்தை பார்க்கப் பார்க்க
இன்னும் வாழ ஆசை
இதைவிட சிறப்பாக இவ்வுலகில்
ஏதும் இல்லை என்பதால்
இப்பொழுதே சாகவும் ஆசை!

Labels:

கவிதைகள்

அஹிம்சைக் கொலை


நீதான் உண்மையான காந்தியவாதி!
கத்தியின்றி ரத்தமின்றி
என் தினம் கொல்லும்
அஹிம்சாவாதி!
தினம் தினம் உன் கொலைகளை சந்திக்க
கோடி முறை நான் உயிர்த்தெழுவேன்!



உன் புருவம் என்ன கருப்பு வானவில்லா?
அதைக் கண்டதும் என் மனதில் மழை பெய்கிறதே!




தமிழைக் காதலிக்கும் தமிழச்சியே
இந்த தமிழனையும் காதலி!



நான் வாழும்போது உன்னை நினைக்கவில்லை
உன்னை நினைப்பதாலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்

Labels:

கவிதைகள்

காதல் மழை

உன் கண்களில் முத்தமிட்டால்
என் கண்களில்(ஆனந்த) மழை!

உன் கன்னங்களில் முத்தமிட்டால்
என் மனதிலே மழை!

உன் உதடுகளில் முத்தமிட்டால்
என் உயிரிலே மழை!



கல்லுக்கு உயிர் தந்தால் சிலை!
சொல்லுக்கு உயிர் தந்தால் கவிதை!
இவை இரண்டுக்கும் உயிர் தந்தால்
நீ!


கண்மனியே
காதலுக்கே உனைப் பார்த்தால்
காதல் வரும்
காதலன் எனக்கு வராதா?


எனக்குப் பிடித்த ஒரு சொல் கவிதை
உன் பெயர்தான்!

Labels:

கவிதைகள்

காதலர் தினம்

ஊரெங்கும் இதே பேச்சு
இன்று காதலர் தினமாம்!

உனக்கு நினைவிருக்கிறதா
உன்னிடம் என் காதலைச் சொன்ன

அந்த காதலர் தினத்தை
எப்படி மறப்பாய் நீ!

மௌனத்தால் சம்மதம் சொல்லி
என்னைக் கட்டிப் பிடித்தாயே!

நம் இருவரிடயே உள்ள
காற்றுக்குக் கூட மூச்சு முட்டுவது போல

அப்பப்பா! இப்பொழுது நினைத்தாலும்
எனக்கு மூச்சு முட்டுகிறது.

Labels:

கவிதைகள்

பெற்ற கடன்

எந்த கடனையும் திருப்பிக் கொடுக்கலாம்
ஆனால் இந்த கடனை திருப்ப முடியாதென்று
நண்பன் ஒருவன் பந்தயம் வைத்தான்

முன்னர் நான் நினைத்திருந்தேன்
இன்னொரு பிறவி என்று ஒன்றிருந்தால்
மீண்டும் உன் மகனாக பிறக்க வேண்டும் என்று

ஆனால் இப்பொழுது எண்ணுகிறேன்
நான் பட்ட கடனை அடைக்க வேண்டும்

ஆதலால்
அடுத்த பிறவியில்
நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேயாக வேண்டும்

Labels:

ஏமாற்றியது யார் - Part 2

ஏப்ரல் 13. சித்திரை பிறந்தது. பக்கத்து வீட்டு கோமதி புதுப்புடவையை கட்டிக்கொண்டு, "பரிமளா! நீயும் புதுசைக் கட்டிக்கோயேன், ரெண்டு பேருமா கோயிலுக்கு போய்ட்டு வரலாம்" என்றாள். "இந்த நீல புடவை எனக்கு எவ்வளவு அழகா இருக்கு! 500 ரூபாய் கிழிஞ்ஜது கூட எனக்கு நல்லதாப் போச்சு" என்று மனசு பெருமைப்பட்டது.

கோவில் உட்பிரகாரத்தில் காலை வைக்கும் போது கீழே டைல்ஸில் இருந்த தண்ணீரை பாராமல் காலை வைக்க பாலன்ஸ் தவறி கையில் விளக்கேற்ற கொண்டு வந்த எண்ணை புடவையில் சிந்தியது.பரிமளாவுக்கு அழுகை முட்டியது. "சீயக்காய்த் தேய்த்து கழுவினால் போய்டும்" - கோமதி சமாதானப் படுத்தினாள். விட்டுக்குப் போனதும் கொஞ்ஜம் சீயக்காயும், சோப்பும் போட்டு எண்ணை பட்ட இடத்தில் தேய்த்தாள். அவ்வளவுதான். "அய்யோ! என்னங்க! புடவை எப்படி சாயம் கொட்டுது பாருங்களேன்! நீல சாயம் முழுக்க பார்டரில் இறங்கிடுச்சு பாருங்க! படுபாவி! அந்த புடவைக்காரன் நம்பள நல்லா ஏமாத்திட்டாங்க" என்றாள் மனம் நொந்தபடி.

Labels: ,

Friday, April 11, 2008

ஏமாற்றியது யார்??? - part 1

ஏப்ரல் முதல் தேதி.பட்டாபி பால் கார்டு வாங்குவதற்கு க்யூவில் நின்று கொண்டிருந்தான்.கசகச என்று காலை நேர வெய்யில் எரிச்சலாக வந்தது.க்யூ மெதுவாகத்தான் நகர்ந்தது.கார்டு வாங்கிக்கொண்டு ஆபீஸ் போகவேண்டிய டென்ஷன்.மெல்ல அரை மணி நேரம் கழித்து பட்டாபியின் முறை வந்தபோது பின்னாலிருந்து கூட்டம் முண்டியடித்து முன்னுக்குத் தள்ளியது. அவசரமாய் பர்ஸிலிருந்து எடுத்த 500 ரூபாய் நோட்டு பர்ரென ஜிப்பில் மாட்டி கிழிந்தது. விதியை நொந்து கொண்டு வேறொரு நோட்டை கொடுத்து கார்டு வாங்கி, ஆபீஸ் விரைந்தான். மனசு கிழிந்த நோட்டை எப்படி தள்ளுவது என்று கணக்குப் போட்டது.


ஆபீஸ் முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் தனக்கு BP மருந்து உள்பட இன்னபிற மருந்து வகைகளின் மாதாந்திர பில்லயும் செட்டில் பண்ண பார்மஸிக்கு சென்று கிழிந்த நோட்டை நான்காக மடித்து ஒன்றுமே தெரியாதது போல கொடுத்தான். மருத்து கடை ஊழியர், இவர் ரெகுலர் கஸ்டமர் ஆயிற்றே என்று " சார், நீங்க வேற நோட்டு 2 நாள் கழிச்சு தாங்க சார், என்கிட்ட இந்த கிழிஞ்ஜ நோட்டு ஓடாது" என்றார்.

வீட்டில் விஷயத்தைச் சொல்ல, மனைவி பரிமளா வெகு சாமர்த்தியமாய் மறு நாள் காலை காய்கறிக்காரனிடம் நோட்டை தள்ளப் பார்க்க "என்னம்மா! அம்பது ரூபா காய்க்கு ஐ நூறு ரூபாய் நோட்டு தர, அதுவும் இது கிழிஞ்ஜிருக்கு" என்று கத்தினான். அதே எரிச்சலுடன் உள்ளே நுழைந்து, " இந்த துப்பு கெட்ட மனுஷனுக்கு எல்லாம் அவசரம். பொறுப்பு கிடையாது. இந்த நோட்டை பாங்கிலே மாத்தனும்ன்னா போக வர ஆட்டோ செலவே 40 ரூபா தண்டம் அழணும், இந்த வெய்யில்ல யாரு நடந்து போறது" என்று பட்டாபியின் காது பட இரைந்தாள்.

அப்போது " பரிமளா! நம்ம புடவைக்காரர் நல்ல காட்டன் புடவைகள் கொண்டு வந்துருக்காரு! நீ பார்க்க வரயா?" பக்கத்து வீட்டு கோமதி குரல் கொடுத்தாள். தற்பொழுது புடவை வாங்க வேண்டிய தேவையே இல்லையென்றாலும் 520 ரூபாய்க்கு அடர்ந்த நீல நிறத்தில் சாம்பல் நிற பார்டர் போட்ட புடவையை எடுத்துக்கொண்டு " புடவைக்காரரே, போகும்போது நம்ம வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கோங்க" என்று சொல்லிவிட்டு வந்தாள்.

ஏற்கனவே அழகாக செல்லோ டேப் போட்டு ஒட்டி வைத்திருந்த 500 ரூபாய் நோட்டோடு ஒரு 20 ரூபாயையும் சேர்த்து புடவைச் சுமையைத் தூக்கி வந்தவனிடம் சாமர்த்தியமாக கொடுத்து விட்டாள். "அப்பாடா, ஒரு வழியாக கிழிஞ்ஜ நோட்டு கைமாறியதே!" என்று பெருமூச்செறிந்தாள்.

Labels: ,