market passion

Friday, April 11, 2008

ஏமாற்றியது யார்??? - part 1

ஏப்ரல் முதல் தேதி.பட்டாபி பால் கார்டு வாங்குவதற்கு க்யூவில் நின்று கொண்டிருந்தான்.கசகச என்று காலை நேர வெய்யில் எரிச்சலாக வந்தது.க்யூ மெதுவாகத்தான் நகர்ந்தது.கார்டு வாங்கிக்கொண்டு ஆபீஸ் போகவேண்டிய டென்ஷன்.மெல்ல அரை மணி நேரம் கழித்து பட்டாபியின் முறை வந்தபோது பின்னாலிருந்து கூட்டம் முண்டியடித்து முன்னுக்குத் தள்ளியது. அவசரமாய் பர்ஸிலிருந்து எடுத்த 500 ரூபாய் நோட்டு பர்ரென ஜிப்பில் மாட்டி கிழிந்தது. விதியை நொந்து கொண்டு வேறொரு நோட்டை கொடுத்து கார்டு வாங்கி, ஆபீஸ் விரைந்தான். மனசு கிழிந்த நோட்டை எப்படி தள்ளுவது என்று கணக்குப் போட்டது.


ஆபீஸ் முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் தனக்கு BP மருந்து உள்பட இன்னபிற மருந்து வகைகளின் மாதாந்திர பில்லயும் செட்டில் பண்ண பார்மஸிக்கு சென்று கிழிந்த நோட்டை நான்காக மடித்து ஒன்றுமே தெரியாதது போல கொடுத்தான். மருத்து கடை ஊழியர், இவர் ரெகுலர் கஸ்டமர் ஆயிற்றே என்று " சார், நீங்க வேற நோட்டு 2 நாள் கழிச்சு தாங்க சார், என்கிட்ட இந்த கிழிஞ்ஜ நோட்டு ஓடாது" என்றார்.

வீட்டில் விஷயத்தைச் சொல்ல, மனைவி பரிமளா வெகு சாமர்த்தியமாய் மறு நாள் காலை காய்கறிக்காரனிடம் நோட்டை தள்ளப் பார்க்க "என்னம்மா! அம்பது ரூபா காய்க்கு ஐ நூறு ரூபாய் நோட்டு தர, அதுவும் இது கிழிஞ்ஜிருக்கு" என்று கத்தினான். அதே எரிச்சலுடன் உள்ளே நுழைந்து, " இந்த துப்பு கெட்ட மனுஷனுக்கு எல்லாம் அவசரம். பொறுப்பு கிடையாது. இந்த நோட்டை பாங்கிலே மாத்தனும்ன்னா போக வர ஆட்டோ செலவே 40 ரூபா தண்டம் அழணும், இந்த வெய்யில்ல யாரு நடந்து போறது" என்று பட்டாபியின் காது பட இரைந்தாள்.

அப்போது " பரிமளா! நம்ம புடவைக்காரர் நல்ல காட்டன் புடவைகள் கொண்டு வந்துருக்காரு! நீ பார்க்க வரயா?" பக்கத்து வீட்டு கோமதி குரல் கொடுத்தாள். தற்பொழுது புடவை வாங்க வேண்டிய தேவையே இல்லையென்றாலும் 520 ரூபாய்க்கு அடர்ந்த நீல நிறத்தில் சாம்பல் நிற பார்டர் போட்ட புடவையை எடுத்துக்கொண்டு " புடவைக்காரரே, போகும்போது நம்ம வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கோங்க" என்று சொல்லிவிட்டு வந்தாள்.

ஏற்கனவே அழகாக செல்லோ டேப் போட்டு ஒட்டி வைத்திருந்த 500 ரூபாய் நோட்டோடு ஒரு 20 ரூபாயையும் சேர்த்து புடவைச் சுமையைத் தூக்கி வந்தவனிடம் சாமர்த்தியமாக கொடுத்து விட்டாள். "அப்பாடா, ஒரு வழியாக கிழிஞ்ஜ நோட்டு கைமாறியதே!" என்று பெருமூச்செறிந்தாள்.

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home