market passion

Sunday, April 13, 2008

எழுத்தாளர் சுஜாதா(ரங்கராஜன்)

ஓர் எளிய மனிதரின் நினைவுகள்

சுஜாதா என்று எழுத்துலகில் அறியப்படும் ஓரு இனிய எழுத்தாளரை இழந்து நிற்கும் இவ்வேளையில் அவரைப் பற்றிய சில தகவல் துளிகள்:

காற்று புகாத இடங்கள் எப்படியில்லையோ, அதே போல இவர் எழுத்துலகில் சாதிக்காத/ தொடாத துறைகளே இல்லையென கூறலாம்.

அறிவியலை தனது எளிய முறையில் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் தமது படைப்புகளில் புகுத்தி தமிழ் எழுத்துலகிற்கே முன்னோடியாக திகழ்ந்தவர் இவரேயாவர்.

இவருடைய திறமை அறிவியல் சார்ந்து மட்டும் இல்லாமல் மற்ற துறைகளிலும் இருந்தது. இலக்கியத்தின் மீது தீராது மோகம் கொண்ட இவரது திறமை, சிறுகதைகள், தொடர்கள், அறிவியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள் என பரந்து விரிந்து நின்றது. இது மட்டுமா? சினிமாத் துறையிலும் தனது திறமையை நிரூபித்தவர்.

இவரது முதல் கதை 1953ஆம் ஆண்டு வெளி வந்தது.ஆனால் இவர் பிரபலமடைய தொடங்கியது 1962 ஆம் ஆண்டு முதல்தான்.இவரது படைப்புகள் தொடர்ந்து வெளியாகின,அவர் தனது இறுதி மூச்சு வரை எழுத்தையும் சேர்த்து சுவாசித்தவர்.இவரது படைப்பில் 100க்கும் மேற்ப்பட்ட நாவல்கள்,200க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள்,10 அறிவியல் நூல்கள், 10 நாடகங்கள் அடங்கும்.

அறிவியலை எப்படி தனது எழுத்துகளில் பதித்தாரோ அதேபோல், கை வலிக்க எழுதும் முறையை மாற்றி கணிணி மூலம் பதிப்புகளை எழுத வித்திட்டவரும் அதி வெற்றி கண்டவரும் இவரே.இன்று கணிணி இல்லாத படைப்பாளிகளே இல்லை எனலாம்.

இவருடைய எழுத்துகளில் காணும் நகைச்சுவை உணர்வு,சாதாரன வார்த்தைகள், நக்கல், எதார்த்தம் உள்ளிட்டவை இவருக்கு எண்ணற்ற ரசிகர்களை உலகம் பூராவும் பெற்றுத் தந்தது.

தமிழ் இலக்கிய உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர் சுஜாதா எனலாம். சுத்தத் தமிழில் எழுதினால்தான் இலக்கியம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அதை மாற்றி புதுமையைப் புகுத்தியவர் இவர்தான்.

ஒரு காலக் கட்டத்தில் இவர் எழுத்தைத் தாங்கி வெளிவராத இதழ்களே இல்லை எனலாம். இவரது எழுத்துக்கள் சாதாரண இதழ்கள் முதல் இலக்கியத் தரம் வாய்ந்த இதழ்கள் வரை எல்லாவற்றயும் அலங்கரித்தது.

கணிணிகள் குறித்தும், மனித மூளை குறித்தும் சுஜாதா பல நூல்கள் எழுதியுள்ளார்.தகவல், தொழில் நுட்பம், தமிழ் எழுத்துக்கள் குறித்தும் ஏராளமாக எழுதியுள்ளார்.இவரது ஆலோசனை கேட்டு பயன் அடைந்த தொழில் நுட்ப துறையினர் பலர்.இவரது ஆலோசனயின் பெயரில் உருவான தமிழ் எழுத்துக்களும் கணிசமானவை.
ஆங்கில கணிணி வார்த்தைகளுக்கு இணையாக தமிழ் வார்த்தைகள் ஏராளமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளார்.

நாம் இன்று பயன்படுத்தும் ஓட்டு போடும் இயந்திரத்தின் வடிவமைப்பாளரின் குழுவுக்கு தலைமை தாங்கி, வெற்றிகரமாக அதை முடித்து பாராட்டும் பெற்றவர்.இவரது எழுத்துப் பணியை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்து சிறப்பித்தது.ஆவரது கல்லூரி வகுப்பு தோழர் நமது முன்னாள் முதல்வர் அப்துல் கலாம் அவர்கள்.

எழுத்தாளர் ஒருவருக்கு முதன் முதலாக கட் அவுட் வைக்கப்பட்டது சுஜாதாவுக்குத்தான். ஆனந்த விகடனில் வெளியான அவரது நாவல்களான கனவுத் தொழிற்சாலை மற்றும் பிரிவோம் சந்திப்போம் ஆகியவற்றிக்காக விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் சுஜாதாவுக்கு சென்னை அண்ணா சாலையில் கட் அவுட் வைத்து பெருமைப்படுத்தினார்.

என்னை அவர்பால் ஈர்த்தது அவருடைய "கரையெல்லாம் செண்பகப்பூ" என்ற தொடர் கதைதான்.கிராமப்புர கவிதை வரிகளோடு கதையோட்டம் தெளிந்த நீரோடை போல் செல்லும்.இந்த கதை பின்னால் திரைப்படமாகவும் வெளி வந்தது.

அவரின் சொந்த வாழ்க்கையிலும் எளிமையாக வாழ்ந்தவர்.பணத்திற்கும் புகழுக்கும் என்றுமே பேராசை கொள்ளாதவர்.அவருக்கு நடந்த அறுவை சிகிச்சையைக்கூட நகைச் சுவையோடு ஏடுகளில் குறிப்பிட்டுள்ளார்.இயற்கைக்கு இசைந்து கொடுப்பவர்.

இன்று நம்மிடையே அவர் வாழவில்லையென்றாலும், அவருடைய எழுத்துக்கள் என்றும் நம்முடன் வசிக்கும் என்பதில் எவ்வித ஐய்யமும் இல்லை.அவர் ஆத்மா சாந்தியடைய நாம் பிரார்திப்போம்.

Labels:

0 Comments:

Post a Comment

<< Home